ஒரு ஆயுதப் போராட்டம் எத்தகையக சூழலில் அழியக்கூடாதோ அப்படி அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போரின் முடிவு துயரம் கவிந்த இருண்ட மேகத்தை தமிழ் மக்கள் மேல் இறக்கிச் சென்றிருக்கிறது. புலிகள் அழிவிலிருந்து தப்பியிருந்தால் இன்றைய சூழல் வேறு. இந்த அழிவை நான் தமிழர்கள் சந்தித்த பெரிய பினண்டைவாகவே பார்க்கிறேன். காரணம் பெரும்பான்மைச் சமூகமும் அதன் தலைமையும் தென் பிராந்தியத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கும் விஸ்தரிப்பு நோக்கத்திற்கும் தன் சொந்த மக்களான சிங்களர்களை பலியாக்குவதோடு தமிழ் மக்களை அச்சுறுத்தி பெரும்பான்மை சமூகத்திற்கு போதையை ஊட்டிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் ஏதுவுமற்ற நிலையில் சூழல் நிலவும் மௌனமுமே அதன் வெற்றியையும் வெற்றிக்குப் பிந்தைய போதையையும் நீட்டித்துக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் அவரது குடும்பம், ஏனைய போராளிகள் குறித்த தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக வழங்குவதன் மூலம் புலத்தில் மக்களை பலவீனமாக்க நினைகிறது இலங்கை அரசு. இபப்டியான பெரும் இன்னலும் இக்கட்டும் சூழ்ந்துள்ள நிலையில் அவ்வப்போது 13-வது சட்டத்திருத்தம் குறித்து இலங்கை பேசிவருகிறது. இந்தியா தற்காலத்தில் 13-வது சட்டத்திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்று பேசாமல். பொதுவாக இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் சமமாக வாழும் படியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்கிறது. அனைத்து சமூகத்தினரும் என்றால், சிங்களர்களும் சம உரிமை இல்லாமல் இருப்பது பொலவும், பெரும்பான்மை பௌத்த சிங்கள சமூகத்தையும் சிறுபான்மை சமூகத்தையும் சம அளவில் வைத்துப் பார்க்கிறது. இந்தியா அல்லது சில நேரங்களில் தமிழ் மக்கள் அங்கு கௌரவமாக வாழ வேண்டும் என்கிறது. ஆனால் ராஜபட்சேவுக்கு அவரின் குடிமக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும் சொல்கிறது இந்தியா.
ஆனால் இந்த 13-வது சட்டத்திருத்தம் என்கிற அங்கத நாடகம் இன்று புலிகளின் வீழ்ச்சியாலும், தமிழர் தரப்பின் கோரிக்கைகளை முன் வைக்கக் கூட ஒரு சரியான தலைமை இல்லை என்ற நிலையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் ஒரு தரப்பு பலவீனமாகி விட்டது என்பதற்காகவே பல வீனமான ஒரு தீர்வை அவர்களின் தலையில் கட்டி விடுவது என்பது முரணைத் தீர்ப்பதற்கான வழி என்றோ, நீண்ட கால நோக்கில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றோ இலங்கையில் உள்ள பேரினவாதிகள் நினைக்கவில்லை. ஜெயவர்த்தனே காலத்தில் தொடங்கி நடந்த இந்த நாட்கத்தில் இலங்கையின் சகல்க் கட்சிகளும் பங்கெடுத்துக் கொண்டன. இந்தியாவை ஏமாற்றும் இந்த நாடகத்தின் ஒரு பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பத்தையும் மீறி சில வேளை இந்தியா நடந்திருக்கலாம். அதுதான் வடக்கு கிழக்கு இணைப்பு. ஆனால் நீதிமன்றம் மூலம் அதை வென்ற பிறகு 13-வது திருத்தத்தில் மீது இருப்பது வடக்கு கிழக்கு மக்களுக்கு நில அதிகாரமும் போலீஸ் அதிகாரமும்தான். போலீஸ் அதிகாரம் வேண்டாம் என்று கருணா,டக்ளஸ் போன்றோர்கள் சொல்லி வரும் சூழலில்,
கிளிநொச்சி வீழ்ந்ததை விட்டு சர்வக்கட்சிக் கூட்டத்திலிருந்து விலகிய அதற்காக சொன்னக் காரணம் அதிர்ச்சி அளித்தது கிளிநொச்சி வீழ்ந்த பிறகு தமிழ் மக்களுக்கு தீர்வு தேவையில்லை என்று வெளியேறியது. இடது சாரிக் கட்சி என்று சொல்லப்படும் இனவாதக் கட்சியான ஜே.வி.பியும் ஹெல உருமய போன்ற பௌத்த சிஙக்ள அடிப்படைவாதிகளும் இன்று தீர்வு தேவை இல்லை என்கிறார்கள். 13 -வது சட்டத்திருத்தம் என்கிற ஒன்றுமே இல்லாத தீர்வு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் விடிவே அதில் இருப்பது போலவும் அதை வழங்கவிடாது தடுப்பதும் கொடுத்துவிடுவேனா? என்று ராஜபட்சே நடிப்பதும் மிகப்பெறிய நாட்கங்கள். நீண்டகாலமாகவே தமிழ் மக்களை வைத்து நடைபெறும் இந்த சீட்டு விளையாட்டு புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் வலுபெற்றிருக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இதில் எதிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதோடு இலங்கை என்கிற ஒரு தேசத்தில் மன வேறுப்பாட்டை முன்னிலும் அதிமான கொண்ட காலத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதும்தான் யதார்த்தமான உண்மை.
13- வது சட்டத்திருத்தத்தால் தமிழ் ம்கக்ளுக்கு கிடைத்த ஒரே ஆதாயம் இலங்கையில் தமிழர்களின் மரபு வழித்தாயகம் என்பது வடக்கு கிழக்கு என்பதாக அது உருவாக்கிய அடையாளம்தான். ஆனால் இப்போது அதுவும் இல்லை. காணி அதிகாரமும், போலீஸ் அதிகாரமும் இல்லை என்றால், 13- வது சட்டத்திருத்தத்தில் என்னதான் இருக்கிறது என்பதை இலங்கை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதுவரை இந்த தீர்வு தொடர்பாக பேசுவதோ இதை நடைமுறைபடுத்தக் கோரி கெஞ்சுவதோ வீண் வேலை. சம்ஷ்டியாட்சி முறையிலான தீர்வு சாத்தியமில்லை என்பதும். மாநிலங்களல்ல மாகாண அளவிலான உரிமைகள் கூட வழங்கப்படலாகாது என்பதும்.நாம் கொடுப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று தடித்தனமாக பேசுவதும். போர் கொடுத்த வெற்றி போதையின் வார்த்தைகள். நீண்ட நாட்களுக்கு பிரபாகரனின் இழப்பை வைத்தே தமிழ் மக்களை மிரட்டி விட இயலாது என்பதை நீங்கள் உணரக்கூடும்.
இப்போது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் அதிகார பலம் குறையும் வரை சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான காத்திரமான போராட்டங்களை இலங்கைக்கு வெளியே முன்னெடுக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதுபதி முறையில் உச்சபட்ச அடக்குமுறையை இலங்கை இராணுவ ஆட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த போதை தெளியவும். உள் அழுகிக் கொண்டிருக்கும் காயங்களும். பிரபாகரன் கொடுத்த அடிகளும் தெரிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். இழப்புகளை மறைத்து, அழுகி நாறிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்ய மண்டியிட்டு பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே காய்களை நகர்த்துகிறார். அவர் சவால்களை இராணுவத்தின் மூலம் எதிர்கொள்கிறார். சர்வதேச நாடுகளை அகதி முகாம்களில் நிரம்பிவழியும் மலக்கூடங்களைக் கொண்டே சரி செய்யப்பார்க்கிறார். அவர்களை பட்டினியிட்டு, முகாம்களுக்குள் அடைத்து மேற்கின் மனச்சாட்சியை உலுக்கி பணம் பறிக்கும் ஒரு பிக்பாக்கெட் காரனைப் போல ராஜபட்சே இப்போது என் கண்களுக்குத் தெரிகிறார். அது போன்ற ஒரு பிக்பாக்கெட் கருவிதான் 13-வது சட்டத் திருத்தமும்.
இதோ வடக்கு கிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கு என்று இந்தியா தன் பட்ஜெட்டில் 500 கோடி ரூபாயை அறிவித்தது. தமிழக மக்கள் போர் நிறுத்தம் கேட்டார்கள். இந்திய அரசோ இலங்கை அரசுக்கு மக்கள் பேரின் கோடிகளைக் கொட்டுகிறார்கள். இலங்கை அரசோடு சேர்ந்து இந்திய வெளிவிவகாரத்துறை இப்பணியைச் செய்யுமாம். வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார்? இதே சிவசங்கரமேனனும். எம்.கே நாராயணனும். கடந்த காலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். இந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்றும். எவ்விதமான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன என்று சர்வதேச அளவிலான கண்காணிப்புக் குழு ஒன்று கூட இதுவரை அமைக்கப்படைவ்ல்லை.ஆக, கண்கூடாக ஒன்று நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது வடக்கு மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் மறுபடியும் தங்களின் பாரமப்ரீய பிரதேசங்களுக்குச் செல்வார்கள் என்ற நிலை இல்லை. அம்மக்கள் முகாம்களுக்குள் இருக்கிறவரைதான் உலக நாடுகளிடம் அவர்களைக்காட்டி இலங்கை கையேந்த முடியும்.
தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வுகளையும் கொடுக்காமல் அவர்களை அரசியல் ரீதியாகவும் வதிவிட ரீதியாகவும் சிதறிடித்து தனிமைபடுத்துவதிலேயே பெரும்பான்மை சமூகத்தின் வெற்றி இருக்கிறது என்னும் சூழலில் 13-வது சட்டத்திருத்தன் கீழ் தீர்வைத் தேடுவது போல தேடிக் கொண்டே இருப்பதுதான் இதுதான் இலங்கையில் நிலை. இதை இந்தியாவும் ஆதரிக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.
இன்றைய சூழலில் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது சரியா?
பொதுவாக அரசியல் தீர்வு குறித்துப் பேசுவோர் இலங்கையில் போர் முடிந்து விட்டது என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள். துயரமான இனப்படுகொலை ஒன்று தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு புலிகளின் தலைமை வஞ்சகமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் நூற்றுக் கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ போராளிகள் இலங்கையில் பல் வேறு பகுதிகளிலும் சிறு சிறு குழுக்களாக இருப்பதும் தெரியவருகிறது. புலிகளின் கடைசி நேர முடிவான ஆயுதங்களை மௌனித்திருக்கச் செய்வது என்கிற முடிவின் படியே அவர்கள் தாக்குதல் எதையும் தொடுக்காத அரசியல் முடிவை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புலிகளின் ஆயுதப் போராட்டம் அதன் வலிமையை முற்றாக இழ்ந்துள்ள நிலையில் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என்கிற இலங்கை அரசின் பிரச்சாரம் என்பது பொய் பிரச்சாரமே. இம்மாதிரி ஒரு சூழலில்,
தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் சிலர் போருக்குப் பிந்தைய அரசியல் தீர்வு குறீத்துப் பேசுகிறார்கள். கிழக்கின் குரல் அதிகமாக இம்மாதிரி கூட்டங்களில் ஒலிக்கும் நிலையில் வடக்கு மக்களுக்கான அரசியல் கருத்துக்களை எடுத்து வைக்க ஆளில்லாத சூழலில் இம்மாதிரியான கருத்துக்களும் தீர்வுகள் குறித்தும் பேசபப்டுகிறது. எந்த மக்களுக்காக இவர்கள் தீர்வு சொல்கிறோம் என்று பேசுகிறார்களோ அந்த மக்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இல்லை அவர்கள் தடுத்து வதை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு திரும்பாதவரை இங்கிருந்து கொண்டு தீர்வு குறித்துப் பேசுவதென்பது அபத்தமான ஒன்றாகவேப் படுகிறது. இலங்கை அரசின் ஆதரவோடு இந்தியவுக்கான இலங்கைத் தூதர் ரொமேஷ் ஜெயசிங்கே , துணைத்தூதர் அம்சா, இந்து ஆசிரியர் ராம், போன்றோர் கலந்து கொள்ளும் கூட்டங்களும் இவைகளுள் ஒன்று. இந்து பரிவாரங்களின் ஒரு பிரதான அமைப்பான ஆர்.எஸ். எஸ் அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆப்சர்வர் இதழும் அவர்களின் சென்னையை மையமிட்டு நடத்தப்படும் அமைப்பான "அப்சர்வர் ரிசார்ச் பவுண்டேசன்" அமைப்பும் இவர்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசின் குரலை ஒலிப்பது சமீபத்தில் சென்னையில் ரகசியமாக நடந்து வருகிறது. இம்மாதிரி கூட்டங்களுக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்பதோடு ரகசியமாகவே அழைப்பிதழும் விநியோகிக்கப்படுகிறது.
இன்னும் சிலரோ ஈழம் என்கிற கருத்தையே நிராகரிக்கிற போக்கைக் கொண்டிருக்கின்றனர்.புலிகளுடன் முரண்பட்ட இஸ்லாமிய மக்களின் குரலை பிரதானமாக வைத்து முன்னெடுக்கப்படும் இம்மாதிரி கூட்டங்களில் தமிழர் தரப்பு உரிமைகளோ கோரிக்கைகளோ வெளிப்படுத்தப்படுவதில்லை. இப்போக்கு மேலும் மேலும் சிறுபான்மை சமுகங்களிடையே பிளவை உருவாக்குவதோடு மீண்டும் ஒரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் ஏனென்றால் , கிழ்ககில் இஸ்லாமியர்களும் வடக்கின் தமிழ் மக்களையும் மோத விடுவதற்கான ஒரு சூழலை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கான சூழலை இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளும் அப்சர்வர் போன்ற அமைப்புகளும் செய்யத் துவங்கியுள்ளது.
எந்த மக்களுக்காக நாம் தீர்வு குறித்துப் பேச முனைகிறோமோ அவர்கள் இன்று சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு இனமாக இருக்கும் போது அவர்களின் குரல் நெறிக்கப்பட்டிருக்கும் சூழலில் தீர்வு குறீத்துப் பேசுவதே இன்னொரு வன்முறைதான். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளார்கள் தண்டிக்கப்பட்டாலும் மட்டுமே அம்மக்கள் நம்மீது நம்பிக்கை கொள்வார்கள்.
மற்றபடி,
ராஜபட்சேயின் ஆட்சியில் கொடுமையை உணரும் நிலையில் சில சிங்களக் கட்சிகள் வந்திருப்பதும் தெரிகிறது. மீண்டும் சொல்வதென்றால் சிங்கள ஆட்சியாளர்களின் பல குறையாமல் தீர்வு சாத்தியமில்லை. இராணுவ ரீதியாக தமிழ் மக்களை வென்று அரசியல் ரீதியாக சிங்களர்கள் எழுச்சி பெற்றி ஒரு மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்வது போன்ற ஒரு மயக்கத்தைக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் மக்களின் வேதனைகளும் விம்மல்களும் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மக்களை முகாம்களில் இருந்து அவ்ர்களின் இடங்களுக்கு அனுப்பு....நிவாரணம் என்ற பெயரில் நிலத்தை மக்களிடம் இருந்து பிடுங்காதே, என்கிற குரல்களை உயர்த்துவதோடு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்கு எதிராக போராட முன்வரவேண்டும் . இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுப்பப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம். அது வரை ஒரு யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வது நல்லது. இலங்கையில் இனி சிங்களர்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை.