Tuesday, July 7, 2009

தமிழகத்தில் ஈழ அகதிகள் நிர்கதியாய் விடப்பட்ட இன்னொரு கூட்டம்





டி.அருள் எழிலன்



போர் முடிவுற்றதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் முகாம்களுக்கு உள்ளும் வெளியிலுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளை நாட்டுக்கு திரும்பி அனுப்பும் முடிவை இந்தியா உறுதியாக எடுத்திருப்பதாகத் தெரிகிறது. மாநில அரசு இது தொடர்பாக எந்த கொள்கை முடிவுகளும் எடுக்காத சூழலில் மாநில போலீசார் தமிழகம் முழுக்க உள்ள முகாம்களில் உள்ள அகதிகளிடம் நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறோம் என்ற உத்திரவாதத்தை பெற முயர்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது. எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் சிங்களர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சகோதர நாடு என நம்பி தமிழகத்துக்கு வந்தனர். அன்றைய சூழலில் ஈழ அகதிகளுக்கு தமிழ் சமூகத்தில் பெரும் வரவேற்பும் மரியாதையும் நடந்தது. இடைப்பட்ட காலங்களில் நடந்த கசப்பான உணர்வுகளை பயன்படுத்திய சில சுயநலமிகள் பாதிகக்ப்பட்டு வந்த அகதி மக்களுக்கும் உள்ளூர் தமிழ் மக்களுக்குமான மன முரணை உருவாக்கினார்கள். ஆனாலும் இன்று வரை பெரும்பாலான தமிழக மக்கள் ஈழ அகதிகள் திருப்பி அனுப்பப் படக்கூடாது என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். எண்பதுகளின் தொடங்கி இன்று வரை சுமார் (கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழ் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள் ) சுமார் முகாமுக்குள்ளும் வெளியிலுமாக இரண்டு லட்சம் அகதிக் குடும்பங்கள் வாழ்வதாக தெரிகிறது. இவர்களை எப்படியாவது தமிழகத்தை விட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் இந்தியா முனைப்பு காட்டத் துவங்கியுள்ளது.





அதிகளவான அகதிகள் தமிழகத்துக்கு வருவதை தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு உகந்ததல்ல என்று பார்க்கும் இந்திய வெளிவிகாரத்துறை அவர்களை மூட்டை கட்டி இலங்கையில் கொண்டு கொட்டுவதையே விரும்புகிறது. பொன்னான வாழ்வோ, ஒளிமயமான எதிர்காலமோ தமிழகத்தில் இல்லாவிட்டாலும் கூட ஒரு விதமான பாதுகாப்பும் குடும்பத்தோடு அரைவயிற்றுக் கஞ்சியோடு வாழும் வாழும் இவர்களுக்கு கிடைத்திருந்தது. புலிகள் ஊடுறுவல், இலங்கையில் போர் தீவீரமடைதல், என்ற சுழல் எழும் போதெல்லாம் மாநில போலீசாரால் இந்த அகதிகள் கடும் கண்காணிப்புக்கு ஆழாகிறார்கள். தவிறவும் ஈழ அகதிகளை மிகவும் ஏளனமாக பார்க்கும் பொதுப்புத்தியும் இந்த காலத்தில் வளர்ந்திருக்கிறது. எப்படி மலையக மக்கள் ஏனைய உயர்வர்க்கத்தினரால் கீழானவர்களாக பார்க்கப்பட்டார்களோ அது போல இங்கே அகதிகள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற நிலை இருந்தது. அவர்களின் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருந்தது, எல்லாக் குழந்தைகளையும் போல அகதிகளின் குழந்தைகள் படிக்க முடியாத சுழுலும் இருந்தது. இந்த நிலைகள் இன்று பெரும் மாற்றம் கண்டிருக்கிறது. நடந்து முடிந்துள்ள போர் தமிழக மக்களை இவர்கள் மீது கரிசன் கொள்ளத் தூண்டியிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் அவர்கள் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்.


திருப்பி அனுப்புவது நியாயமா?
அரசு நிர்வாகமும் போலீசும் ஈழத்திலிருந்து வருகிற அனைவரையுமே புலிகளாக பார்ப்பதும். அவர்களை கடும் விசாரணைக்குட்படுத்துவதும் நடக்கிறது முதியவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை திடகாத்திரமான உடல்கட்டோடு உடலில் காயங்களோ தழும்புகளோ இருந்தால் அவளவுதான் அவர் பெண்ணாக இருந்தாலும் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்படுவார். இந்த முகாம் ஒரு வகையான சித்திரவதை முகாம்களே. இவ்வகை முகாம்கள் நாடு கடந்த போராளிகளுக்கு வழங்கப்படுவதே சர்வதேச மனித அறத்திற்கு எதிரானது. இது மட்டுமலலமல் முகாம்களில் வாழ்வோர் மீதான் சீண்டல்கள், திருட்டுப்பட்டம், போலீஸ் வழக்கு, என்று அவர்கள் சந்திக்கிற கொடுமைகள் அதிகம். இந்நிலையில் இது போன்ற திருப்பி அனுப்பும் முயர்ச்சி 1992-ல் ஒருமுறை முன்னெடுக்கப்பட்ட போது ராமதாசும், நெடுமாறனும் நீதிமன்றத்திற்குப் போய் தடையாணை பெற்றார்கள். தவிறவும் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயர்ச்சி அப்போது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது போர் முடிந்து விட்டதாகவும் ஆங்கு சுமூகச் சூழல் நிலவுவதாகவும் இலங்கையின் குரலையே இந்தியாவும் பிரதிபலிக்கிறது. அதையே தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீது திணிக்கவும் பார்க்கிறது.
போரின் பாதிப்பும் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்ட மக்களின் கதைகளையும். ஊர் ஊராய் ஓடி செத்து மடிந்த கதைகளும் அவர்களுக்கு அன்றாடம் வந்து சேர்கின்ரன. அவர்கள் தங்களின் உற்வுகளின் நிலை குறித்து கலங்கிப் போய் இருக்கின்றனர். சிலரோ சொந்தங்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அழுது புமபுகிறார்கள். பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியவர்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் தெரியாமல் பாதிகக்ப்பட்டிருக்கிறார்கள். முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் மக்களையும் வேதனையோடும் அச்சத்தோடும் பார்க்கிறார்கள். நாம் திரும்பிச் சென்றாலும் இதுதான் கதியோ என்று பீதியடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் கடந்த முப்பதாண்டுகளில் இவளவு மோசமான அச்ச உணர்வுக்கும் பெருந்துன்பத்திற்கும் ஆட்பட்டதில்லை. அங்குள்ள உறவுகளே வாழ்விழந்து நிர்கதியாய் நிற்கும் போது தாங்கள் திரும்பிச் செல்வதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது நிலையில் உள்ளனர். இப்படியான நிலையில் உள்ள மக்களிடம் திரும்பி வரமாட்டோம் என்று கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவது கொலைக்களத்திற்கு இரண்டு லட்சம் மக்களை இந்தியாவே அனுப்பி வைப்பது போன்றதுதான் என்கிற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.
ஏன் இந்த பாரபட்சம் ?
1950-ல் திபெத் சீன அரசால் ஆக்ரமிக்கப்பட்ட போது பெருமளவிலான திபெத்திய அகதிகளை இந்தியா வலிந்து வரவேற்று உபசரித்தது. எண்பதுகளில் ஈழ அகதிகளையும் இப்படித்தான் வரவேற்றது. திபெத்திய அகதிகளுக்கு வளமான இடங்களை தெரிவி செய்து அவர்களை சுயமாக இராணுவக் கட்டுப்பாடில்லாமல் சிவில் நிர்வாகத்தின் கீழ் வாழ அனுமதித்தது. பசுமையான வடகிழக்கு மாநிலங்களில் திபெத்தியர்கள் வாழ்கிறார்கள். இமாச்சல் பிரதேசத்தில் திபெத்தியர்களின் தலைவர் தலாய்லாமாவும் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்களும் மிக மிக வசதியாக முழு சுதந்திரத்தோடு அவர்களின் கலாசார, மத வழக்கங்களைப் பேணிய படி வாழ்கிறார்கள். கர்நாடகாவின் பசுமையான கூர்க், கொள்ளேகால் போன்ற வனப்பு மிகுந்த இடங்களில் இவர்கள் வாழ்கிறார்கள், ஐந்தாயிரம் பேருக்கு 3,500 ஏக்கர் விவசாய நிலம் இவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது . சுய முன்னேற்றம், பொருளாதார உற்பத்தி, உணவுத்தேவை என்பனவற்றை தாங்களே நிவர்த்தி செய்து கொள்ளும் மிக உயர்ந்த நிலையில் திபெத்திய அகதிகள் இருக்கும் போது தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளோ பொதுக் கழிப்பிடங்களில் வாழ்வது போல கேவலமான ஒரு வாழவை வாழ்கிறார்கள். வாரத்திற்கு இரண்டுநாள் வேலை, மூன்று கிலோ அரிசி, எழுபத்தைந்து ரூபாய் என்பது அரசு இவர்களுக்கு வழங்குகிற உதவித் தொகை.

நாம் கோருவது ...

@ அரசியல் தீர்வு ஏற்பட்டு மக்கள் அச்சமற்று வாழும் சூழல் ஏற்படும் வரை அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது.
@ போலீசாரும் க்யூ பிரிவி போலீசாரும் அகதிகளை அச்சுறுத்தி ஒப்புதல் பெறும் சூழல் ஒழிக்கப்பட வேண்டும்.
@ மனித உரிமை ஆர்வலகளைக் கொண்ட ஒரு குழ்வை உருவாக்கி அவர்களின் தாயகத்தில் உள்ள சூழலை அவர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் எடுத்துச் சொல்லி அவர்களின் விருப்பத்தைக் கண்டறிய வேண்டும்.
@ முகாம்களில் உள்ளவர்கள் உழைப்பு உத்திரவாதத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@ குழந்தைகளின் கல்வி ஏனைய குடிமக்களுக்கு கிடைப்பது போல தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
@ அதிகதிப் பெண்களின் சுயமரியாதையும் உழைப்பும் சுதந்திரமும் பேணப்பட வேண்டும்.
@பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கே அகதிகளாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி குடியுரிமை கொடுக்க முன்வர வேண்டும்.
இவைகளை விட்டு விட்டு எப்படியாவது அவர்கள் சென்றால் சரி என்ற நினைப்பில் மத்திய மாநில அரசுகள் நடந்து கொள்வார்கள் என்றால் தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.





























No comments:

Post a Comment