Tuesday, July 7, 2009

முகாம்களின் கதை...



டி.அருள் எழிலன்.

அன்பின் அப்பா தங்கை அறிவது,
இங்கு நலமே, உங்கள் நலம் எப்படி? அம்மாவை வவுனியா வைத்தியசாலையில் போய் பார்த்தீர்களா? இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கிறது. சாப்பாடு லயனில் நின்று வாங்க வேண்டும். சில வேளை முடிந்து விடும் தீர்ந்தால் கிடைக்காது. குக்கருக்கு மண்ணெண்ணெய் இல்லை பிள்ளைக்கு மா போத்தல் இல்லை குழந்தைக்குரிய சாப்பாடு ஏதும் இல்லை, விளக்கு எடுக்க எண்ணெய் ஏதும் இல்லை ஆறேனும் வந்தால் குழந்தைக்கு மா போத்தல் கொடுத்து அனுப்பவும். செல்லடிக்கு பயந்துதான் இங்க வந்தோம் வந்தவங்களில் பாதி பேரை இங்கேயும் காணவில்லை. அப்பா எங்களை வெளியே எடுக்க முடியுமா? மறக்காமல் குழந்தைக்கு மா போத்தல் கொடுத்து அனுப்பவும். தங்கையை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.
இப்படிக்கு அன்பு மகள்
சாந்தினி
மனிக் முகாம்.


பெற்றவள் குற்றுயிரும் குலையிறுமாக மருத்துவமனையில் கிடக்கிறாள். தகப்பனும் தங்கையும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் முள்ளியவாய்க்காலுக்கு முகாமிலிருந்து மகள் எழுதிய கடிதம் இது. ஆனால் இந்தக் கடிதம் தகப்பனுக்குச் போய்ச் சேர்ந்ததா? அல்லது இறுதிக் கட்டப் போரில் சாந்தினியின் தங்கையும் தகப்பனும் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டார்களா? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு வழியாக போரில் வன்னியை வென்று புலிகளை தோற்கடித்து விட்டதாகச் சொல்லி பெரும் வெற்றிக் களியாட்டங்களில் ஈடுபட்டிக்கிறது சிங்களப் பேரினவாதம். ஆனால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் முடமாக்கப்பட்டு வவுனியா, கிளிநொச்சி, யாழ்பாணம், என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், அலுமினியத் தகரங்களால் வேயப்பட்டு சுற்றிவர கம்பி வேலிகளால் தடுக்கப்பட்டுள்ள முகாம்களை இலங்கை அரசு கண்காணிப்பு இல்லங்கள் என்கிறது அல்லது நலன்புரி நிலையங்கள் என்கிறது. ஆனால் அன்றாடம் ரத்தம் சொட்டச் சொட்ட தமிழ் மக்கள் வடிக்கிற கண்ணீர் கதைகளோ அதை தமிழர்களுக்காக இலங்கை அரசு உருவாக்கிய வதைமுகாம் என்கிறது.
ஒட்டு மொத்தமாக இந்த முகாமகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 57,293 சிறுவர்களும், 7,894 விதவைப் பெண்களும், 3,100 கர்ப்பிணிப் பெண்களும்,11,877 காயமடைந்தோரும் இருப்பதாக பொத்தாம் பொதுவாக ஒரு கணக்கைச் சொல்லுகிற இலங்கை அரசு இதுவரை முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையை வெளிப்படையாகச் சொல்லவில்லை. முழுக்க முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த முகாம்களில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேர் இருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கெடுப்பை முகாம்களுக்குள் நடத்திய போது கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் மக்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்றோ அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ இலங்கை எந்த பதிலையும் சொல்ல வில்லை. 14 வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான எந்த வன்னித் தமிழனும் முகாமுக்குள் நிம்மதியாக உறங்கவோ உறவினர்களோடு சேர்ந்து வாழவோ சாத்தியமில்லாத சுழுல் அங்கே நிலவுவதாக சர்வதேச பணியாளர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இவளவு பெரிய மனிதப் படுகொலையை செய்த இலங்கையை தட்டிக்கேட்கவோ மனித நெறி உறைக்கவோ ஒருவரும் இல்லை என்பது தெரிந்ததும் கேட்பார் கேள்வி இல்லாமல் நாள் தோறும் மனிதப் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முகாம்களுக்குள், போரும் செல்லடியும் முள்ளியவாய்க்காலோடு முடிந்து போனது என்று நினைத்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்களுக்கு இப்போது உயிர்வாழ்வதே பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது.


வன்னி மக்களுக்காக இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் முகாம்களிலேயே ஆகப் பெரியது வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மானிக் முகாம்தான். இங்கு மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் போதிய உணவில்லாமல் ஊட்டச்சத்திலாமல் மரணத்தை எதிர் நோக்குகிறார்கள். கடந்த பல மாதங்களாக கடுமையான போருக்குள் வாழ்ந்த சிறுவர்களும் குழந்தைகளும் கடுமையான உளவியல் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதற்கு எதுவிதமான சிகிட்சைகளும் இல்லாத சூழலில் அவர்களுக்கு போதிய உணவும் இல்லை. நாளொன்றுக்கு பத்திலிருந்து பதினைந்து முதியவர்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இறந்து போகிறார்கள். அந்த உடல்கள் அங்கேயே அடக்கம் செய்யப்படுகின்றன. முகாமுக்குள் அபலைகளாக திரியும் பலரையும் பார்க்கும் போது வன்னி மக்கள் ஒரு பெருந்தொகையானோர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.


இதோ மானிக்முகாமுக்கு சென்று வந்தவர் சொல்கிறார் இப்படி,
‘‘நான் கொழும்பில் இருந்து மானிக்முகாமுக்கு என் சொந்தங்களைக் காணச் சென்றேன். அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனது சகோதரரை பார்க்க இன்னொரு முகாமுக்குச் சென்றேன் அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிஸார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிஸார் உங்களை அவதானித்துக் கொண்டே இருப்பர். நான் எனது சகோதரரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவர் கண்கலங்கி தேம்பியபடி இருந்தார். கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றோம் என்பதை எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணை வீச்சுக்காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக் கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இப்போது அவர்களுக்கு சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஓவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கி.மீமாவும் 300 கிராம் சீனியும் கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.’’ என்று தன் சகோதர்களின் கதை சொல்கிறார் தப்பிப் பிழைத்த ஒரு மனிதர்.


ஆண்களாவது பரவாயில்லை ஒரு கொட்டகைக்குள் இரண்டு குடும்பங்களை இராணுவம் குடியமர்த்தியிருக்கிறது. எந்த நேரத்திலும் அறைக்குள் நுழையவோ யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லவோ கட்டற்ற சுதந்திரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சிறுமிகள், இளம்பெண்களை அவர்கள் குறிவைக்கிறார்கள். மறுக்கிறவர்களுக்கு திரும்பிவர முடியாத பயணம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. ஆமால் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.அல்லது வெறி பிடித்த ஒரு இராணுவ சிப்பாயின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறார்கள்.





No comments:

Post a Comment