Tuesday, July 7, 2009

பழங்குடிகள்...... சாம்பல் மூடிய நெருப்பு


டி.அருள் எழிலன்
பழங்குடிகள்...... சாம்பல் மூடிய நெருப்பு
"இந்தியாவின் இனவெறிக்கு நானே சாட்சி, வடகிழக்கில் இருந்து ஒருவர் தென் இந்தியாவுக்குச் சென்றால் அவரை நேபாளியா? என்று கேட்கிறார்கள். டில்லியிலோ வடகிழக்கு என்றொரு பகுதி இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் நினைக்கவில்லை. இந்தியாவின் அதிகார பீடங்களில் இருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்," இது இரண்டு நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தண்ணீர் குறீத்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட மிசோராம் மாநில முதல்வர் லால் தான்வாலா (ஷிலீக்ஷீவீ லிணீறீ ஜிலீணீஸீலீணீஷ்றீணீ) கூறிய வார்த்தைகள். அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டுதான் முதல்வராகியிருக்கிறார். காங்கிரஸ் அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது. வாலாவின் இந்தப் பேச்சு தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது வடகிழக்கில் கொஞ்சம் கொஞ்மாக இந்தியா செல்வாக்கிழந்து கொண்டிருக்கிறது. போலீஸ் ராணுவ அடக்குமுறை, சட்டவிரோத குழுக்கள் என அங்குள்ள பழங்குடி மக்களை அச்சுறுத்தி அமைதியை நிலைநாட்டுக் கொண்டிருக்கிறது இந்திய இராணுவம். ஆனால் வடகிழக்கின் கொதிப்புதான் மேற்குவங்கத்தில் பழங்குடிகள் மாவோயிஸ்ட் கூட்டாக வெடிக்கிறது. போலீசாலோ சட்டத்தாலோ நீங்கள் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறீர்கள்.ஆனால் அம்மக்களின் பெரும்பங்கு
நிலங்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு எஸ்டேட் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அவர்களின் பூர்வீக நிலங்களை பிடுங்கி தேயிலையும் காபியும் பயிர்செய்து நீண்டகாலமாக அவர்களை அவர்களது மண்ணிலேயே கூலிகளாக்கி முதலாளிகளாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நிலங்களை பங்கிடுங்கள். உள்ளூரில் வேலைவாய்ப்பையும் கிராமங்களுக்கு அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுக்கும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. உலக மயமாக்கலின் முக்கிய சந்தையாக இந்தியா மாறிய பிறகு இந்தியாவின் பெருநகரங்களும் அதன் கட்டிடங்களும் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் அதே நகர்ப்புரங்களில் மத்திய தர வர்க்கமும் உதிரிகளும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஏழைகளும் வாழும் நகரமாக இருந்த சென்னை இன்று பணக்காரர்களுக்கே உரிய ஒரு நகரமாக மட்டுமே மாறிவிட்டது. குடிசைகள் கொழுத்தப்பட்டு அவர்கள் சென்னைக்கு வெளியே குடியமர்த்தப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் வாழ்ந்த இடங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் முளைத்து விடுகின்றன.ஒன்றிலோ அவர்கள் வீடற்றவர்கள் ஆனார்கள். அல்லது நகரங்களுக்கு வெளியே உருவான புதிய சேரிகளுக்கு படையெடுத்தார்கள். இந்தியாவின் முரண்பாடும் அது சந்திக்கும் இடர்பாடுகளும் இருகி வருவதற்கு இது ஒரு பிரதான காரணம்.ஆனால் தொழில் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் என்ற கோஷத்தில் இந்த ஏழைகளில் குரல் எடுபடாமல் போகிறது.

வடகிழக்கின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரே நேரத்தில் மேற்குவங்கத்திலும் காஷ்மீரிலும் இராணுவ நடவடிக்கையை துரிதப்படுத்தியிருக்கிறது இந்தியா. ஐந்து துணை ராணுவக் குழுக்களை அனுப்பி லால்கர் & ன் ஐம்பது கிராமங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத்தால் பழங்குடிகளின் மனதை வெல்ல முடியவில்லை. இது சிக்கலான பிரச்சனை. மேற்கு வங்கத்தில் ஆளுவது மார்க்சிஸ்டுகள், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்ஸ்சிஸ்டுகளின் கோட்டையில் மம்தா தொகுதிகளைக் கைப்பற்றி மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்துகிறார். மார்க்ஸ்சிஸ்டுகளோ அணு சக்தி ஒப்பந்தத்தில் காங்கிரஸோடு முரண்பட்டு வெளியில் வந்து மூன்றாவது அணி அமைத்து தோல்வி கண்டவர்கள். காங்கிரசுக்கோ கூட்டணி தயவு இப்போது தேவையில்லை. இந்நிலையில்தான் மாவோயிஸ்டுகள் பழங்குடிகளின் துணையோடு லால்கர்க்கை கைப்பற்றினார்கள். மம்தா தேர்தலில் போது மாவோயிஸ்டுகளோடு ரகசிய கூட்டு வைத்திருந்தார். மாவோயிஸ்ட்கள் கைப்பற்றிய லால்கர்க்கில் மார்க்ஸ்சிஸ்டுகள் தனித்து விடப்பட்டனர். அவர்களின் அலுவலகம் உட்பட தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு சிலர் கொல்லபப்ட்டனர். கடந்த முப்பதைந்து ஆண்டுகளாக மார்க்ஸ்சிஸ்டுகள் எங்களுக்கு எதைச் செய்தார்களோ அவர்களுக்கு நாங்கள் அதையே திருப்பிச் செய்கிறோம் என்றார்கள் மாவோயிஸ்டுகள். மாவோயிஸ்டுகள் மட்டுமே இதில் தெளிவாக இருந்தார்கள். இந்திய தேர்தல் அமைப்பை ஏற்றுக் கொண்டு இந்த நிரல் மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிற மார்க்கிஸ்டுகள் லால்கரில் தோல்வி அடைந்தார்கள். மம்தாவுக்கோ மாவோயிஸ்டை ஆதரிப்பதா? காங்கிரஸை ஆதரிப்பதா? என்கிற குழப்பமான நிலையில் அங்கு இராணுவம் மக்களிடம் அத்து மீறி நடந்து கொள்கிறது. உடனடியாக படைகளை அங்கிருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நெருகக்டி கொடுத்தார்.‘மாவோயிஸ்டுகள் பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுகி அவர்களை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிற இராணுவ போலீஸ் நடவடிக்கையால் பலன் இல்லை என்று சொன்ன மேற்குவங்க முதலவர் கடைசியில் மத்திய அரசின் நிர்பந்தத்துக்குப் பணிந்து மாவோயிஸ்டுகளைத் தடைச் செய்தார். இந்திய அரசு மாவோயிஸ்டுகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை கொண்டு வந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாகவே லால்கர் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாம். ஆனால் தேர்தல் நேரத்தில் மீட்கும் நடவடிக்கையை எடுத்தால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தேர்தலுக்குப் பிறகு லாக்கர் மீட்பை இராணுவ, போலீஸ் கூட்டு நடவடிக்கையாக எடுத்திருக்கிறார்கள். உண்மையில் மேற்குவங்க எல்லையோர பகுதியாக லால்கர் மக்கள் என்ன கோரினார்கள். அவர்களுக்கு முறையான கல்வியோ, வேலைவாய்ப்போ, சிவில் உரிமைகளோ எதுவுமே கிடையாது. அவர்களின் பூர்வீக பகுதிகளை ஆக்ரமிக்கும் பெரு முதலாளிகளிடம் இருந்து நிலங்களைக் காப்பாற்றி எங்களுக்கு பங்கிட்டுக் கொடுங்கள் நாங்கள் அதில் விவசாயம் செய்கிறோம் என்றார்கள். நிலப் பங்கீடும், உழைப்புக்கான உத்திரவாதமும் கல்வியும் அவர்களின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது. ஆனால் மத்திய அரசு அவர்களுக்கு அரிசியும் காய்கரிகளும் அனுப்பி இருக்கிறோம் என்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் அவர்களை சோற்றால் அடித்து வீழ்த்த நினைக்கிறார்கள் டில்லிக்காரர்கள். மார்க்ஸ்சிஸ்டுகளோ கடந்த முப்பதைந்து ஆண்டுகால ஆட்சியில் மேற்குவங்கத்தில் தோல்வியைத் தழுவினார்கள். அந்தத் தோல்வியின் துவக்கம்தான் நந்திக்கிராம். இப்போது லால்கர். ஆதிவாசிகளின் பிரச்சனை இந்திய மலையோர மாநிலங்கள் அனைத்திலும் உள்ளதுதான். கேரளாவின் முத்தங்காவில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும் இன்னமும் வட கேரளத்தின் ஆதிவாசிகள் பிரச்சனை அங்கே தீர்க்கப்பட வில்லை. தமிழகத்திலும் வரண்ட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை அண்டிய மாவட்டங்களில் பழங்குடிகளின் பிரச்சனை கவனிக்கப்படாமலேயே இருக்கிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

பெருதொகையான மக்கள் நீண்டகால கிளர்சியை தங்களின் கோரிக்கைகளுக்காக நடத்தினார்கள். உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் இரும்புக்கதவுகள் இந்த ஏழை மக்களுக்காக திறக்கவே இல்லை.போபால் விஷவாய்வுக் கசிவின் கொலைகளுக்காக, நர்மதா பசமோன் திட்டத்தில் வாழ்விழ்ந்த விவாசாயிகளுக்காக, குடிசைப் பகுதி மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்காக என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள். அந்த குரல்கள் கண்டு கொள்ளப்பட வில்லை. கொதிப்புகளையும் எழுச்சி பெற்ற போராட்டங்களை போலீஸ் நடவடிக்கையால் ஒடுக்கியது ஜனநாயகம். விளைவு அதிருப்தியுற்ற அவர்கள் தங்களுக்கு விடிவு தருவார்கள் என்று நம்பி மாவோயிஸ்டுகளுடனோ, தேசீய இனக்குழுக்களுடனோ, அடிப்படைவாதக் குழுக்களுடனோ, இணைந்து கொள்கிறார்கள். ஆனால் மாவோயிஸ்டுகள் ஈழ விடுதலை ஆயுதப் போராட்டத்தின் தோல்வியில் இருந்து பாடம் கற்றிருக்கிறார்கள். அவர்கள் கெரில்லா போர்த் தந்திரங்களைக் காட்டிலும் அரசியல் தந்திரங்களையே கைக் கொள்கிறார்கள். ஈழப் போரின் முடிவுகளுக்குப் பிறகு அதே பாணியிலான இராணுவ நடவடிக்கையையே இந்தியா கைக்கொள்கிறது. லால்கர் மக்கள் இப்போது முகாம்களின் இருக்கிறார்கள். இலங்கை அளவுக்கு இனவதை முகாம்களோ முட்கம்பி முகாம்களோ அல்ல ஆனாலும் அவர்கள் முகாம்களில் இருக்கிறார்கள் அவர்களுக்கு அரிசியும் காய்கரியும் வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் மாவோயிஸ்டுகள் வேட்டையாடப்படுகிறார்கள். இம்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து யாரும் பேசவில்லை. இந்தளவில் மாவோயிஸ்டுகளை துரத்தி விட்டு அவர்களுக்கு அரிசியும் பருப்பும் போட்டு பிரச்சனையை சமாளித்து விடலாம் என நினைக்கிறது இந்திய உள்துறை.

காஷ்மீர்

நீண்டகாலமாகவே எரிந்து கொண்டிருக்கிறது காஷ்மீர். இந்தியாவினுடையதோ பாகிஸ்தானுடையதோ அல்லாமல் தனியாட்சிப் பகுதியாக இருந்த காஷ்மீர் நேருவின் வாக்குறுதிகளின் அடிப்படையில் தனித்துவமான சில உரிமைகளோடு இந்தியாவில் இணைந்திருக்கச் சம்மதித்தது. அப்போதைய காஷ்மீர் மன்னன் அரிசிங் இந்து மன்னன், பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் அரிசிங்கை ஏற்றுக் கொண்டிருந்தனர். அரிச்ங்கோ பாகிஸ்தானிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள இந்தியாவின் உதவியை நாட இந்தியா காஷ்மீரை சுவீகரித்தது இப்படித்தான். ஆனால் சுயமான பிரதேசனாக இந்தியாவின் அனுசரணையோடு காஷ்மீர் இருக்க வேண்டும் என்பதுதான் அரிசிங்கின் ஆசை. அரிசிங்கை திருப்திப்படுத்தி காஷ்மீரை இந்தியாவுக்குள் இழுத்த இந்தியா கீழ் கண்ட உறுதிகளை காஷ்மீருக்குக் கொடுத்தது.

ஜம்மு - காஷ்மீர் இந்தியாவோடு இணைந்துவிட்டது. இந்தியாவுக்கென்று, "இந்திய அரசமைப்புச் சட்டம்' 1946 - 1949இல் உருவாக்கப்பட்டது. காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதி. அதே நேரத்தில் "ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்' என ஒன்று வரையப்பட இந்தியா ஒத்துக்கொண்டது. ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம், அங்கே செயல்பட்ட அரசமைப்பு அவையில், 17.11.1956இல் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.

The Constitution of Jammu and KashmirPreamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves –... ... ... ... ... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.
1. இது என்ன கூறுகிறது?

ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?. அதன் முகவுரையில் "இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் "இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.
2. 1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, "குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

தேசியக் கொடி

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந் நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.
144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3:2
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக் கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். ( நன்றி வே.ஆனைமுத்து)
காஷ்மீர் மக்களிடம் நடத்தபப்ட வேண்டிய வாக்கெடுப்பை இன்று வரை இந்தியா நடத்தவில்லை. ஒரு பக்கம் பாகிஸ்தான் இராணுவத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள். இன்னொரு பக்கம் இந்திய இராணுவத்தின் கடும் ஒடுக்குமுறைகள். முன்னாள் போராளிகள் இயக்கங்களை விட்டு விலகியவர்கள். வறுமைக்கு பலியாகி வாழ்விழந்தவர்கள் இன்றூ காஷ்மீரில் அதிகம் அவர்களைக் கொண்டே உளவு வேலைகளைச் செய்கிறது இந்தியா. மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டு வரும் பகுதியில் காஷ்மீரும் ஒன்று.
ஜூன் முதல் வாரத்தில் இந்திய இராணுவத்தால் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறை செய்து கொல்லப்படுகிறார்கள். அமர்நாத் பனிலிங்க கோவிலுக்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு ஜூன் மாதம் முழுக்க காஷ்மீர் இயல்பு நிலையில் இல்லை. பொதுமக்கள் மிகப்பெரும் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி உட்பட சில அமைப்புகள் இந்த போராட்டங்களை ஒழுங்கு செய்கின்றன. ஆனால் காஷ்மீருக்குப் போன சிதம்பரம் " காஷ்மீரில் இராணுவ நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளுக்கு எதிரானதுதானே தவிற பொது மக்களுக்கு எதிரானது அல்ல" என்றார். அப்படியானால் கொல்லப்பட்ட இரு பெண்களும் பயங்கரவாதிகள் என்று மறைமுகமாக சொல்வதாக பொருளாகிறது. அங்கும் நாளுக்கு நாள் முகாம்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வரும் ஆண்டுகளில் உலகின் ஆசிய, ஆப்ரிக்க பிராந்தியத்தின் பெரும்பங்கு மக்கள் முகாம்களுக்குள் மட்டுமே வாழ நிர்பந்திக்கப் படுவார்களோ என்று அச்சப்படும் அளவுக்கு பதட்டம் அதிகரிக்கிறது. காஷ்மீரின் மனித உரிமைக் குரல், இந்த்ய இராணுவ அத்துமீற்ல்களுக்கு எதிரான குரல் எல்லாமே காஷ்மீரிகளின் தன்னாட்சிக் கோரிக்கையோடு தொடர்புள்ளது. ஆனால் காஷ்மீரிகளின் பிரச்சனை இத்தனை காலமும் பாகிஸ்தானும் இந்தியாவும் இராணுவ ரீதியாக அணுகி வந்தது போக இப்போது இந்து , முஸ்லீம் மோதலாக மாற்றும் முயர்ச்சியும் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. காஷ்மீர், மேற்குவங்கம், வடகிழக்கு எல்லாப் பகுதிகளிலும் இராணுவ நடவடிக்கைக்கு மாடலாக முன்வைப்பது ஈழத்தைத்தான். புலிகள் மாதிரியான வலுவான ஆயுதக் குழு ஒன்று இவ்விடங்களில் போராடும் என்றால் பெரும் மக்கள் இழப்புகளை நாம் கண்டிருக்கக் கூடும். இவ்விடங்களில் போராட்டம் என்பது கொதித்து எழும் மக்கள் போராட்டமாகவே இருப்பதால் ஈழத்தின் மாடலில் இருந்து முகாம்களுக்குள் முடக்குதல் என்கிற வடிவத்தை மட்டும் எடுத்து செயல்படுத்துவதாகத் தெரிகிறது. மற்றபடி மனித உரிமை மீற்ல்களோ, கொலைகளோ எங்கும் கேள்விகளற்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் சாத்வீகப் போராட்டங்கள் படு தோல்வியில் முடிவதை நாம் காண்கிறோம். ஈழத்துக்கான தமிழக கிளர்ச்சியை மாநில அரசு ஒடுக்கிய விதங்கள் குறித்தும் போராட்ட வழிமுறைகள் குறித்தும் இன்று தமிழகத்தில் விவாதங்கள் நடந்து வருகிறது. மணிப்பூரில் ஜெரோம் ஷர்மிளா ஷானு சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்லி ஐந்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளில் ஜெரோமின் உண்ணாவிரதம் எந்த இந்திய மனச்சாட்சியை உலுக்கியிருக்கிறது.காஷ்மீர், மணிப்பூர், உள்ளிட்ட வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களின் முரண்கள் என இந்தியா எதிர் நோக்கியுள்ள சவால்கள் நாளை இந்தியாவை சிதறடித்து விடும் தன்மை கொண்டவை. நீண்டகாலமாக தமிழகத்தின் சுயாட்சிக் கோரிக்கையை நோக்கி விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இதுதான். மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படு பழங்குடிகளின் பிரச்சனையை பிரத்தியேகமாக அணுகாமல் அடக்குமுறையால் இவைகளை சரிக்கட்டலாம் என்று நினைத்தால் இந்தியாவின் பின்னடைவு இங்கிருந்தே துவங்கும் என நினைக்கிறேன் ஏனென்றால் நாடு முழுக்க புகைந்து கொண்டிருக்கிற சாம்பலுக்குள் இருப்பது தணலான ஒரு நெருப்பு.









No comments:

Post a Comment